Pages

Jul 9, 2012

இந்தியா தயாரிக்கும் முதல் விமானந்தாங்கி போர்க்கப்பல்!


வெளிநாடுகளில் இருந்து, விமானம் தாங்கி போர்க் கப்பல்களை வாங்குவதற்கு பதிலாக, முழுக்க, முழுக்க நம் நாட்டிலேயே போர்க்கப்பல் தயாரிக்க நாடு தயாராகி விட்டது. தற்போது, கேரள மாநிலம், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், முதல் முறையாக விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவிற்கு ரஷ்ய நாட்டில் இருந்து, ஐ.என்.எஸ்.விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ்.வீராட் ஆகிய இரு விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் இருவேறு காலக்கட்டங்களில் வாங்கப்பட்டன. இதில், 1997ல், பணி முடித்து, ஐ.என்.எஸ்.விக்ராந்த் கப்பற்படையில் இருந்து விடை பெற்றது. அக்கப்பல் தற்போது, மும்பையில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் கப்பற்படையில், ஐ.என்.எஸ். வீராட் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இது தவிர, விக்ராந்த் போர்க்கப்பல் விடை பெற தயாரானதும், 1989ல், உள்நாட்டிலேயே இதுபோன்ற போர்க்கப்பல் உருவாக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், அக்காலக்கட்டத்தில், 1991ம் ஆண்டு நாட்டில் பொருளாதார சூழ்நிலை மந்தமாக இருந்ததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே விமானம் தாங்கி போர்க்கப்பலை தயாரிக்கவும், அதை கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டு, 2009ல், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி அதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளை போல, இந்தியாவும் சுயமாக விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்ட முடியும் என்பதை நிரூபிக்க உள்ள இந்த கப்பலுக்கான வடிவமைப்பை, இந்தியன் நேவல் டிசைன் ஆர்கனிசேஷன் வடிவமைத்துள்ளது.
இப்புதிய போர்க்கப்பல், இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்டதாக, 3,500 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படுகிறது. அதிநவீன வசதிகளுடன் உருவாக உள்ள இக்கப்பல், 262 மீட்டர் (அடிபாகம்) நீளமும், 32 ஆயிரம் டன் எடை கொண்டதாகவும் இருக்கும்.
இதை படிப்படியாக அதிகரித்து, 40 ஆயிரம் டன் எடை தாங்கவல்ல போர்க்கப்பலாக உருவாக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், தற்போது கப்பலின் அடிப்பாகம் தயாரிக்கும் பணி முடிக்கப்பட்டு, அருகே உள்ள உப்பங்கழியில் நிறுத்தப்பட்டு, கப்பலின் மேற்பாகம், விமான ஓடுபாதை போன்றவற்றை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
அடுத்தாண்டு, கப்பலின் உள்கட்டமைப்பு பணிகள் முடிந்து, 2015ம் ஆண்டுக்குள் அனைத்து பாதுகாப்பு பணிகளும் முடிவடையும் என்றும், 2016ல், ஐ.என்.எஸ்.விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் முழுமை பெற்று, கப்பற்படையில் சேர்க்கப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த போர்க்கப்பலில், 1,400 வீரர்கள் பணியாற்ற முடியும். மேலும், இதில், ரஷ்ய தயாரிப்பான, மிக் 29 கே ரக போர் விமானங்கள் நிறுத்தப்பட உள்ளன. இதேபோல், ரஷ்யாவில் இருந்து இந்தியா வாங்க உள்ள, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா என்ற போர் கப்பலிலும், இதே ரக போர் விமானங்கள் தான் பயன்படுத்தப்பட உள்ளன.
போர் விமானங்கள் தவிர, பத்து ஹெலிகாப்டர்களும் இந்த போர்க்கப்பலில் தயார் நிலையில் நிறுத்த வசதி செய்யப்படும். நாட்டின் பாதுகாப்புக்கென, குறிப்பிட்ட இலக்கை தாக்கவல்ல ஏவுகணைகள், டாங்கிகள் என பலவற்றை தயாரித்து, வல்லரசு நாடுகளுடன் போட்டி போட்டு வளர்ந்து வரும் இந்தியா, அதிநவீன போர்க்கப்பலையும் உருவாக்கி, யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாம் என சொல்லாமல் சொல்லி வருகிறது.

No comments:

Post a Comment