Pages

May 31, 2012

விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் "உலக சாம்பியன்' * 5வது முறையாக பட்டம் வென்று சாதனை


மாஸ்கோ: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஐந்தாவது முறையாக கைப்பற்றி அசத்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த். நேற்று நடந்த பரபரப்பான "டை- பிரேக்கரில்' இஸ்ரேலின் ஜெல்பாண்டை வீழ்த்தி, மீண்டும் மகுடம் சூடினார். 
ரஷ்யாவின் மாஸ்கோவில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 42, இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பாண்டு, 43, மோதினர். மொத்தம் 12 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின், 7வது மற்றும் 8வது சுற்றில் மட்டும், இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றனர். 
மற்ற 10 சுற்றுகள் "டிரா' ஆனது. கடந்த மூன்று வாரங்களாக நடந்த 12 சுற்று முடிவில் இரு வீரர்களும் தலா 6 புள்ளி பெற்றனர். இதையடுத்து வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்ய, போட்டி "டை பிரேக்கருக்கு' சென்றது. "ரேபிட்' முறையில் நான்கு போட்டிகள் நடந்தது. இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் தரப்பட்டன. 
முதல் "டிரா':
முதல் போட்டியில் கறுப்பு காய்களுடன் ஆனந்த் விளையாடினார். இப்போட்டி 32வது நகர்த்தலின் போது "டிரா' ஆனது. 
ஆனந்த் முன்னிலை:
பின் இரண்டாவது போட்டியில் வெள்ளை காய்களுடன் போட்டியை துவக்கிய ஆனந்த், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து 77 வது நகர்த்தலின் போது, ஜெல்பாண்டு தனது தோல்வியை ஒப்புக்கொள்ள, ஆனந்த் 1.5-0.5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். 
மீண்டும் சமன்:
மூன்றாவது போட்டியில், ஜெல்பாண்டு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், குறிப்பிட்ட நேரத்துக்குள் போட்டி முடியாத நிலையில், 41வது நகர்த்தில் போட்டி மீண்டும் "டிரா' ஆனது. ஆனந்த் தொடர்ந்து முன்னிலையில் (2.0-1.0) இருந்தார். 
அசத்தல் வெற்றி:
கடைசியாக துவங்கிய நான்காவது போட்டியை ஆனந்த் "டிரா' செய்தாலே போதும் என்ற நிலையில், வெள்ளை காய்களுடன் ஆனந்த் போட்டியை துவக்கினார். இப்போட்டியும் 56 வது நகர்த்தலுக்குப் பின், "டிரா' ஆக, 2.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், மீண்டும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் ரூ. 8 கோடி பரிசாக தட்டிச் சென்றார். இரண்டாவது இடம் பெற்ற ஜெல்பாண்ட் ரூ. 6 கோடி பரிசு பெற்றார்.
 செஸ் அரங்கில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆனந்த் ஐந்தாவது முறையாக (2000, 07, 08, 10, 12) பட்டம் வென்றது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ரொம்ப "டென்ஷன்'
வெற்றி குறித்து ஆனந்த் கூறுகையில்,"" போட்டியின் முடிவு "டை பிரேக்கரில்' தான் என்ற நிலையில், காலையில் இருந்தே அதிக "டென்ஷனாக' இருந்தது. ஏனெனில், ஏதாவது ஒருபக்கம் தான் வெற்றி என்பது நன்கு தெரியும். இருப்பினும், போட்டி எப்படி செல்லும் என்று எனக்குத் தெரியாது. கடைசியில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது தான் நான் வென்ற கடினமாக உலக சாம்பியன்ஷிப் போட்டி,'' என்றார்.
வெல்வது கடினம்
ஜெல்பாண்டு கூறுகையில்,"" ஆனந்தை வெல்வது மிகவும் கடினம். இக்கட்டான நேரங்களில் எப்படி சிறப்பாக விளையாடுவது என, பயிற்சி செய்ய வேண்டும்,'' என்றார்.
ஐந்தாவது முறையாக...
கடந்த 2000ம் ஆண்டில் டில்லியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 128 வீரர்கள் பங்கேற்றனர். "நாக் அவுட்' முறையிலான இப்போட்டியின் பைனலில் இந்தியாவின் ஆனந்த், ஸ்பெயினின் அலெக்சி ஷிரோவ் மோதினர். ஆறு சுற்றுகள் கொண்ட இதில் 3 வெற்றி, ஒரு டிரா செய்த ஆனந்த், முதன் முறையாக <உலக சாம்பியன் பட்டம் வென்றார். 
* மெக்சிகோவில் 2007ல் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 8 வீரர்கள் பங்கேற்றனர். 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், 9 புள்ளிகள் பெற்ற ஆனந்த், கோப்பை வென்றார். இதில், ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக், இஸ்ரேலிவ் போரிஸ் ஜெல்பாண்டு தலா 8 புள்ளிகள் தான் பெற முடிந்தது. 
* 2008ல் ஜெர்மனியில் நடந்த 12 சுற்றுகள் கொண்ட போட்டியில், ஆனந்த், ரஷ்ய ஜாம்பவான் விளாடிமிர் கிராம்னிக் மோதினர். இதில் 11வது சுற்றின் முடிவில் (3 வெற்றி, 7 "டிரா') 6.5 புள்ளிகள் பெற்ற ஆனந்த், மூன்றாவது முறையாக பட்டம் வென்றார். 
* 2010ல் பல்கேரியாவின் வேசலின் டோபாலவை சந்தித்தார். 12 சுற்று முடிவில் 6.5 புள்ளிகள் பெற்று, "ஹாட்ரிக்' சாம்பியனானார். 
* தற்போது ஐந்தாவது முறையாக உலக சாம்பியனாக மகுடம் சூட்டியுள்ளார்.
பிரதமர் வாழ்த்து
ஆனந்த் வெற்றி குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,""விளையாட்டு ஆர்வம் கொண்ட, இந்திய இளைஞர்களுக்கு சிறப்பான முன்னுதாரணமாக உள்ளீர்கள். என்றென்றும் நிலைத்து நிற்கும் இச்சாதனையால், தேசமே பெருமைப்படுகிறது,'' என, தெரிவித்துள்ளார்.
பெருமைப்படத்தக்க தருணம்
ஆனந்த் தந்தை விஸ்வநாதன் கூறுகையில்,"" ஆனந்த் பெற்ற இந்த வெற்றி வாழ்க்கையின் பெருமைப்படத்தக்க தருணம். ஜெல்பாண்டு எப்போதும் கடினமான வீரர். அவரை வென்றது கூடுதல் பெருமையாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்,'' என்றார்.
"பாரத ரத்னா' விருது கோரிக்கை
அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தலைவர் பிரபாகர் கூறுகையில்,"" உலகில் மிகப்பெரிய சாதனை புரிந்த ஆனந்துக்கு "பாரத ரத்னா' விருது தரவேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம். இம்முறை இது நிறைவேறும் என்று நம்புகிறோம். இவ்விருதை பெறும் முழுத் தகுதி ஆனத்துக்கு உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment